வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனையை எழுப்பி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச. 01) தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியது. மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை மூத்த உறுப்பினர்கள் உரையாற்றினர். மக்களவையில் மறைந்த 5 உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கினார். ஆனால் SIR உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை கூடிய போதும், அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்து கொள்ளாமல், வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே SIR மீதான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். தங்களுக்கு பதிலளிக்க அவகாசம் தரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். எந்தவொரு விஷயத்திலும் விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.
