கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆறுகள், அணைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் 4மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாத இறுதியில் மழை பெய்ததில், கேரளாவில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்,
கேரளாவில் நேற்று நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. இதனை முன்னிட்டு 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கு கூடுத்லாக மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேப் போல எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக மேலும் 3 மாவட்டங்களுக்கு அரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதும் சூழ்ந்துள்ளன. வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் நீர் பாசனத்திற்காக பயன்படும் பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்த அணைகள் 3-ம் கட்ட எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.