ரஷ்ய அதிபர் புதின் இன்று (டிச. 4) மாலை இந்தியா வருவதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து வரவேற்கிறார். நாளை (டிச. 5) காலை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிப் பிறகு, இருநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23வது இந்தியா- ரஷ்யா ஆண்டு உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்த பயணத்தின் போது, இந்தியா- ரஷ்யா இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், சர்வதேச அளவில் நிகழும் முக்கிய பிரச்சனைகள் குறித்தம் பிரதமர் மோடி- அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் அதிபர் புதின் சந்தித்து பேசுகிறார். பின்னர், தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் புதின் நாளை (டிச. 5) இரவு ரஷ்யா புறப்பட்டு செல்கிறார். அதிபர் புதினின் வருகையை முன்னிட்டு டெல்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் துவங்குவதற்கு முன்பு, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிபர் புதின் இந்தியா வந்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவர் இன்று (டிச. 4) டெல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
