சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக கோயில் சந்நிதானத்தில் உள்ள கருவறைக் கதவுகள், துவார பாலகர்களின் சிலைகள் ஆகியவற்றில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்தனர்.

கடந்த 2019ல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கத் தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, சுமார் 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் இருவர், பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே மாயமான தங்கத்தின் அளவை கண்டுபிடிக்க தங்க கவசங்களில் அறிவியல் பூர்வமான ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, தடயவியல் ஆய்வுக்காக SIT அதிகாரிகள் சந்நிதானத்தில் இருந்து தங்க மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தடயவியல் மற்றும் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பிறகு கண்டறியப்படும் தகவல்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version