மண்டல கால- மகர விளக்கு பூஜைகளுக்காக பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் துவங்கும் மண்டல கால, மகர விளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, 18 படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபடுவர்.
இந்தநிலையில், இந்தாண்டு கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலையில் இன்று முதல் மண்டல கால, மகர விளக்கு பூஜை துவங்கி உள்ளது. இதையொட்டி 16ம் தேதி மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடை திறந்தார். அப்போது, ‘சுவாமியே சரணம் ஐயப்பா…’ என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி, மனமுருகி ஐயப்பனை பிரார்த்தித்தனர்.
இரவு, 11:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டநிலையில், இன்று (17.11.2025) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது.
டிசம்பர் 27ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல், காலை 11.30 மணி வரை சுவாமிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு உச்சபூஜை முடிந்து பிற்பகல் 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று, இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெறும் பிரதான மண்டல பூஜைகள் நிறைவு பெற்றதும், சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்களுக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2026 ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே சத்திரம், எரிமேலி, அழுதகடவு உள்ளிட்ட வனப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதோ, அதிக இரைச்சலுடன் பயணிப்பதோ கூடாது என கேரள வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தினமும் ஆன்லைன் முன்பதிவில், 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில், 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு, சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் தெரிவித்துள்ளது.
