ஆந்திர மாநிலம் மாரேடுமில்லி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதிகளிலும், சத்தீஸ்கர் – மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் உலவி வருவதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது.

அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் உயர்மட்ட தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான மத்வி ஹித்மாவும் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மாரேடுமில்லி பகுதியை பாதுகாப்புப் படையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர்.

ஆந்திராவைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலும் என்கவுண்டர் நடந்தது. இன்று காலை எர்ராபோர் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாவோயிஸ்ட் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி கிரண் சவான் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யார் இந்த மத்வி ஹித்மா?

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள பூர்வதி கிராமத்தில் பிறந்தவர் மத்வி ஹித்மா. பஸ்தார, தண்டேவாடா ஆகிய பகுதிகளில் நன்கு அறியப்பட்ட சந்தோஷ் என்கிற ஹித்மா, இளம் வயதிலேயே மாவோயிஸ்டுகளின் மத்தியக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். சிறிய அளவிலான, வழக்கத்திற்கு மாறான, பதுங்கு தாக்குதல்கள் என்று சொல்லப்படுகிற ‘கெரில்லா தாக்குதல்களை’ பலமுறை தலைமை தாங்கி நடத்தி பிரபலமானார். மக்கள் விடுதலை கெரில்லாப் படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட ஹித்மா, தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, கடந்த ஜூன் 18 ஆம் தேதி ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 மூத்த மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திரா – ஒடிசா எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஆந்திரா – ஒடிசா எல்லை சிறப்பு மண்டல குழு மாவோயிஸ்டுகளின் செயலாளர் உதய், கிழக்கு பிரிவு செயலாளர் அருணா உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version