VB-G RAM G மசோதாவை ஒரு “கருப்பு சட்டம்” என்றும் MNREGA-வை பலவீனப்படுத்துவது ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, இந்தச் சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) அடிப்படைக் நோக்கத்தையே பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய VB-G RAM G மசோதையின் கீழ், யாருக்கு எவ்வளவு வேலை வழங்கப்பட வேண்டும், அது எங்கு வழங்கப்பட வேண்டும் என்பதனை முழுமையாக மத்திய அரசே தீர்மானிக்கும். இது தரைமட்ட யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாத, அவற்றுடன் தொடர்பற்ற அணுகுமுறையாகும் என அவர் விமர்சித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக (MNREGA) திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏழைகள் மற்றும் விவசாயிகளின் சட்டபூர்வ உரிமைகள்மீதான தாக்குதலாகும் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மசோதாவில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சோனியா, இது ஒரு குறியீட்டுச் செயல் மட்டுமல்ல, நெறிமுறையிலும் தவறான நடவடிக்கை என அவர் கூறினார். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நனவாக்குவதற்கான ஒரு திட்டமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) இருந்தது என்றும், இந்த நீக்கம் கிராமங்கள் மற்றும் ஏழைகளின் நலன்களுக்குப் பாதகமானது என்றும் கூறினார்.
சோனியா காந்தியின் கருத்துப்படி, புதிய மசோதா கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை பலவீனப்படுத்தக்கூடும். பழைய MNREGA சட்டத்தின் கீழ், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100–125 நாட்கள் வரை வேலை பெறும் உரிமை இருந்தது.
புதிய மாற்றங்கள் இந்த உரிமையை பாதிக்கும் என்பதுடன், ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும், ஒப்புதலும் பெறாமல் அரசாங்கம் மசோதாவில் மாற்றங்களைச் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவாகும்; மேலும் கிராமப்புறங்களில் உள்ள உண்மையான தேவைகள் மற்றும் பிரச்சினைகளை முற்றிலும் புறக்கணித்த நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த கடுமையான (அடக்குமுறையான) சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் முழு பலத்துடன் போராடுவார்கள் என அவர் தெரிவித்தார். MNREGA உரிமைகளை பாதுகாக்க கிராமவாசிகளும் அனைத்து குடிமக்களும் தங்களின் குரலை உயர்த்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; நாட்டின் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமை தொடர்பான விஷயம் எனவும் சோனியா காந்தி கூறினார்.
