தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்த அவர், இன்று காலை தனி விமானம் மூலம் மும்பை சென்று அங்கிருந்து ஷீரடியை அடைந்தார்.
ஷீரடி சாய்பாபா சன்னதியில் தரிசனம் செய்த விஜய், பாபாவின் சிலைக்கு முன்பாக முழங்காலிட்டு மிகுந்த பக்தியுடன் வழிபாடு செய்தார். அவர் முழங்காலிட்டு வேண்டிக்கொள்ளும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்தல் பரப்புரையின் போது திருச்சி புனித அந்தோணியார் தேவாலயத்திலும் அவர் இதேபோல் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஷீரடியில் அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண மரியாதை அளிக்கப்பட்டது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்தத் தொடர் ஆன்மீக பயணங்கள் அவரது மன அமைதிக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. அவருடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். விஜய்யைக் காண்பதற்காக ஷீரடியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
