துணை குடியரசு தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவி வருகிறது.
துணை குடியரசு தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை துணை குடியரசு தலைவர் பட்டியலுக்கு போட்டியிடுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபப்ட்டது. அதன்படி பாஜக கூட்டணியில் மகராஷ்டிர மாநில ஆளுஅர் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் இருவரும் துணை குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இருவரும் நாடாளுமன்ற எம்பிக்களிடம் தங்களுக்கான ஆதரவை திரட்டினர்.
இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் வைத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவரது ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் யாருக்கு வாக்களிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கேட்டபோது தமிழர் என்ற முறையில் சிபி இராதாகிருஷ்ணனை தாங்கள் ஆதரித்ததாகவும் அதனால்தான் அவருக்கு தர்மர் வாக்களித்திருப்பார் என கூறியதாக சொல்லப்படுகிறது.