வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வின் போது தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், சமையலறை ஆயுதங்களுடன் பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், SIR தொடர்பாக அரசியல் சூடுபிடித்துள்ளது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) குறிவைத்து கடுமையான கருத்துக்களை முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவருகிறார். இந்தநிலையில், SIR இன் போது மாவட்ட நீதிபதிகளின் பணிகளைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து பாஜக சார்பு அதிகாரிகளை அனுப்புவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
வங்காளத்தின் கிருஷ்ணாநகரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய அவர், “தேர்தல்களின் போது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மிரட்ட டெல்லியில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டால், உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் , நீங்கள் அதை பொறுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் சமையலறையில் ஆயுதங்கள் உள்ளன. பெண்கள் முன்வந்து போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்பார்கள்” என்றார்.
யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்று நான் பார்க்க விரும்புகிறேன் : பெண்களா அல்லது பாஜகவா? எனக்கு வகுப்புவாதத்தில் நம்பிக்கை இல்லை . மதச்சார்பின்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது . தேர்தல்கள் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தியும் , பிற மாநிலங்களிலிருந்து மக்களை வரவழைத்தும் மக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது ” என்று அவர் கூறினார் .
பாஜகவை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, ” கலவரக்காரர்களின் கட்சியிடம் நான் இப்போது என் குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா ?” என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசு வங்காளிகளை குறிவைப்பதாக குற்றம் சாட்டிய பானர்ஜி , “எங்களிடம் ஒரு மத்திய உள்துறை அமைச்சர் இருக்கிறார், அவர் அனைத்து வங்காளிகளையும் வங்காளதேசியர்கள் என்று முத்திரை குத்தி தடுப்பு மையங்களுக்கு அனுப்ப எதையும் செய்வார் , ஆனால் மேற்கு வங்கத்திலிருந்து யாரையும் வெளியேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். யாராவது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், அவர்களை எப்படி மீண்டும் அழைத்து வருவது என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.
