இந்தியாவின் அண்டை நாடான சீனா ஒரு பெரிய தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளது. முதன்முறையாக, சீனா கடலுக்கடியில் உள்ள தங்க கையிருப்புகளை கண்டறிந்துள்ளது. இந்த மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஷான்டோங் மாகாணத்தின் லைஜோ (Laizhou) கடற்கரைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புடன், லைஜோ பகுதியில் உள்ள மொத்த தங்க கையிருப்பு 3,900 டன்னைக் (137.57 மில்லியன் அவுன்ஸ்) கடந்துள்ளது. இது சீனாவின் மொத்த தங்க கையிருப்பின் சுமார் 26 சதவீதமாகும். இதன் மூலம், தங்க கையிருப்பிலும் தங்க உற்பத்தியிலும் சீனா தற்போது உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
யாந்தாய் (Yantai) மாகாண அரசு, தற்போதைய ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுள்ள சாதனைகளை எடுத்துரைக்கவும், அடுத்தகட்டத் திட்டங்களை விளக்கவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
இந்த தங்கக் கையிருப்பு கண்டுபிடிப்பு சீனாவிற்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனா மதிப்புமிக்க உலோகங்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்த கண்டுபிடிப்பு அதற்கான முக்கியமான பலனாக அமைந்துள்ளது.
இந்த தங்கக் கையிருப்பின் துல்லியமான அளவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது முன்னதாக கணிக்கப்பட்டதைவிட பல மடங்கு பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், நவம்பரில், சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் 1,444.49 டன்களுக்கும் அதிகமான குறைந்த தர தங்கம் படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 1949-ல் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கப் படிவம் இது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் மாதத்தில், சின்ஜியாங்கிற்கு அருகிலுள்ள உய்குர் தன்னாட்சிப் பகுதியின் மேற்கு எல்லையில் உள்ள குன்லுன் மலைத்தொடரில் 1,000 டன்களுக்கும் அதிகமான தங்கப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னதாக, நவம்பர் 2023-ல், ஷான்டாங் மாகாணம், ஜியாவோடங் தீபகற்பத்தில் 3,500 டன்களுக்கும் அதிகமான தங்கப் படிவங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும், இது சீனாவின் மொத்த தங்க இருப்பில் கால் பகுதி என்றும் அறிவித்தது. ஜியாவோடங் தீபகற்பம் உலகின் மூன்றாவது பெரிய தங்கச் சுரங்கப் பகுதியாகும், மேலும் இது சீனாவின் மொத்த தங்க இருப்பில் கால் பகுதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன தங்க சங்கத்தின்படி, தங்கம் உற்பத்தியில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, அது 377 டன் தங்கத்தை உற்பத்தி செய்தது. இருப்பினும், முன்னணி உற்பத்தியாளராக இருந்தபோதிலும், தங்க இருப்புக்களின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை விட சீனா பின்தங்கியே உள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக சீனா தனது முயற்சிகளைத் தொடர்ச்சியாக முடுக்கிவிட்டு வருகிறது. புவியியலாளர்கள் செயற்கை நுண்ணறிவு, உயர் சக்தி கொண்ட நிலத்தை ஊடுருவும் ரேடார் மற்றும் கனிமங்களைக் கண்டறியும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் உதவியுடன் அதிக விலைமதிப்பற்ற உலோகங்களைக் கண்டறியும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
