கிறிஸ்துமஸ் பரிசாக அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 17ம் தேதி நாட்டு மக்களுக்கு அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவல்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். கடந்த 7 மாதங்களாக சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டினரைக் கூட அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப், காசா போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், கிறிஸ்துமஸ் பரிசாக வீரர்களுக்கு ஈவுத் தொகை வழங்க உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்த வகையில் 14.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமசுக்கு முன்பாக போர் ஈவுத் தொகை வழங்கப்படும் என்றார். 1776ம் ஆண்டில் அமெரிக்கா நிறுவப்பட்டதை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 1,776 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
18 டிரில்லியன் டாலர் மதிப்பில் முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும், இதன்மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், புதிய தொழிற்சாலைகள், பாதுகாப்பு ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
