28 மணிநேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.
நேற்று மதியம் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘பால்கன்-9′ ராக்கெட் மூலம், டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களை வரவேற்றனர். இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா, இன்று விண்வெளி வீரராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடல் தசையில் செயல்பாடு குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு மேற்கொள்ள உள்ளார். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த நிகழ்வை, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் கண்டு களித்தனர்.