ரஷ்யா-உக்ரைன் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா தலைமையில் போர் முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து 20 புள்ளிகள் கொண்ட அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார். இதில் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியமானதாக உள்ளது. ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் தலைநகரான கீவ் நகரம் நேற்று காலையில் ரஷ்யாவின் பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் பலத்த குண்டு வெடிப்பு ஒலியுடன் மக்கள் எழுந்தனர். உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிகிறது.
மேலும் இந்த தாக்குதலில் சுமார் 500 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில் கீவ் நகரம் நிலைகுலைந்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 2,600 குடியிருப்பு கட்டிடங்கள், 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், சமூக சேவை கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. உக்ரைனின் ஆயுதப் படைகளின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைக்க ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக ரஷ்ய இராணுவத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
