தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடான வெனிசுலா சுமார் 28 மில்லியன் அதாவது 2 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடாகும். உலகின் உயரமான ஏஞ்சல் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சி இங்கு தான் உள்ளது. 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வின் படி வெனிசுலா 33 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்துடன் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் வருவாய் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் ஈட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது விஷயம் என்னவென்றால் வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் பசிபிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வழியாக கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாடி உள்ளது. அதேபோல மறுபுறம் ஜமைக்கா, கியூபா வழியாகவும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் இருந்து படகுகள் மற்றும் கப்பல்கள் வழியாக தங்கள் நாட்டுக்கு போதைப் பொருட்கள் வருவதாக கூறி வரும் அமெரிக்கா இதுவரையில் 21 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தென்கரிபிய பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றன. அதில் பெரும்பாலோனார் வெனிசுலாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டுக்கு எதிராக கடல் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. மேலும் வெனிசுலா நாட்டிற்கு எதிராக வான்வெளிகளை மூடப் போவதாகவும் அமெரிக்க அரசு சார்பில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் கூறிய கருத்துக்களை வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை. “ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் அனைத்தும் வெனிசுலா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. இது காலனித்துவ அச்சுறுத்தல். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒரு பொழுதும் அடிபணிய மாட்டோம்.
இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை தான் எப்பொழுதும் விரும்புவோம். அமெரிக்க அரசு எங்களது ஆட்சியை கவிழ்க்கப்பாக்குகிறது. வெனிசுலா ஒரு பொழுதும் வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று வெனிசுலா நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
