அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கண் அயர்ந்து தூங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவியேற்றார். இந்தநிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, ராணுவ அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் பொருளுதார நடவடிக்கை, ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிபர் டிரம்ப் அசந்து தூங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிபர் டிரம்பின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பாராட்டி பேசுகையிலும், முக்கிய விஷயங்கள் குறித்த விவாதத்திலும் அதிபர் டிரம்ப் சிறிது கண் அயர்ந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தொடர் வேலை பளு, வயது மூப்பு ஆகியவற்றின் காரணமாக அதிபர் டிரம்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகின. இருப்பினும், அதனை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும், அமைச்சரவை கூட்டத்தை வெற்றிகரமாக கையாண்டதாகவும் விளக்கம் அளித்து விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
