இந்தியாவில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ‘அபயரெப்’ என்ற தடுப்பூசியின் போலிகள் சந்தையில் புழக்கத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்தின் பெயரிலேயே, பேக்கேஜிங் மற்றும் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தகவல்படி, 2023 நவம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியா சென்று இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் போலி மருந்துகளின் விற்பனை அதிகமாக உள்ளது. ரேபிஸ் வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், போலி மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.
தனிநபர்களால் போலி மருந்துகளை கண்டறிவது கடினம் என்பதால், இந்தியா செல்லும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பே தடுப்பூசி போடவும், இந்தியாவில் சிகிச்சை பெற நேர்ந்தால் மருந்து சீட்டை புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
