புத்தாண்டு தினத்தன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் போர் தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின், உக்ரைனில் ரஷ்யாவின் “இறுதி வெற்றி” குறித்து முழு நம்பிக்கையை வெளிப்படுத்தி, ரஷ்ய படைகளுக்கு ஆதரவு அளிக்க குடிமக்களிடம் அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிராந்தியமான கம்சட்கா தீபகற்பத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு முதலில் கொண்டாடப்பட்டது. பின்னர் இந்தச் செய்தி நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஒளிபரப்பப்பட்டது.
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், போர்க்களத்தில் பணியாற்றும் வீரர்களையும் தளபதிகளையும் புடின் நேரடியாகக் குறிப்பிட்டார். AFP தகவலின்படி,
“நாங்கள் உங்களை நம்புகிறோம்; நமது வெற்றியிலும் உறுதியான நம்பிக்கை உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னணிப் போர்க்களங்களில் சண்டையிடும் வீரர்கள் குறித்து லட்சக்கணக்கான ரஷ்ய மக்கள் மனதார ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். உக்ரைன் போரை ஒரு பொதுவான தேசியப் போராட்டமாக அவர் சித்தரித்தார். இந்தப் போரில் முழு நாடும் வீரர்களுடன் துணை நிற்கிறது என்றும், இந்த யுத்தம் ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் போரில் இரு தரப்பினரும் பெரும் இராணுவ இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதுவரை இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மதிப்பீடுகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து மில்லியன் கணக்கில் வேறுபடுகின்றன.
கருப்பு நிற சூட்டும் அடர் நீல நிற டை அணிந்து ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வலியுறுத்தி அவர், “நமது ஒற்றுமையின் வலிமையே தாய்நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது” என்று கூறினார்.
ரஷ்யாவில் அதிபரின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் புத்தாண்டு உரை என்பது சோவியத் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு பழமையான மரபாகும். இந்த உரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு சற்று முன்பு நாடு முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது, மேலும் இதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
