ரான் – இஸ்ரேல் இடையேயான போர் 16-வது நாளை எட்டியுள்ள சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பாதையை ஈரான் முடக்க முயல்வதால், உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அந்த இடத்திற்குத் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் பெறும் நாடுகள் அந்தப் பாதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்; அமெரிக்கா அவர்களுக்குப் பெரும் அளவில் உதவி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
“ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள். ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.
இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
