இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தக ஒப்பந்த தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்புகளால் வர்த்தக பேச்சுவார்த்தையில் சில தடைகளை சந்தித்ததாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். தாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருகட்டங்களாக நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில், முதல் கட்டத்தில் பரஸ்பர வரி குறித்த பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முதன்முறையாக அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. இறக்குமதி செய்யும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி. இறக்குமதி செய்ய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
