குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது. அவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் சில பொதுவான உணவுகள் கூட அவர்களின் வளர்ச்சிக்கும் நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அந்த வகையில், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கவே கூடாத 5 அன்றாட உணவுகள் மற்றும் அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நிறைந்த பானங்கள்: சோடா, கடைகளில் கிடைக்கும் பழச்சாறுகள், சுவை சேர்க்கப்பட்ட பால் போன்றவற்றில் அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது. இவை எந்த ஊட்டச்சத்து மதிப்பையும் கொடுக்காமல் வெறும் காலரிகளை அதிகரிக்கின்றன.

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் குழந்தைகளின் பற்களை சேதப்படுத்துவதுடன், உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) மற்றும் எதிர்காலத்தில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தி, பிறகு திடீரென குறைக்கும். இதனால் கவனச்சிதறல், சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: அன்றாட உணவில் சில பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைச் சேர்ப்பது மிகவும் சுலபமாக இருக்கலாம். ஆனால், அந்த இறைச்சிகளில் சோடியம், நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் போன்ற அதிகப்படியான உப்பு மற்றும் ரசாயனங்கள் (Preservatives) உள்ளன. அதிகப்படியான சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம். நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை என்று சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மேலும், அவற்றில் ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகளும் (Saturated Fats) அதிகமாக உள்ளன.

சுவை சேர்க்கப்பட்ட யோகர்ட்: யோகர்ட் ஆரோக்கியமான உணவாகக் கருதப்பட்டாலும், குழந்தைகளுக்கு விற்கப்படும் பல சுவை சேர்க்கப்பட்ட யோகர்ட்களில் அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரையும், செயற்கை சுவைகளும் உள்ளன. சில பிராண்டுகளில் விற்க்கப்படும் ஒரு சின்ன யோகர்ட் டப்பாவில் ஒரு நாள் தேவைக்கும் அதிகமான சர்க்கரை இருக்கலாம் என American Academy of Pediatrics, தளத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது சர்க்கரை நிறைந்த பானங்களைப் போலவே உடல் பருமன், பல் சிதைவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்குத் தயிர் கொடுப்பதானால், சர்க்கரை சேர்க்கப்படாத சாதாரண தயிரை, புதிய பழங்களுடன் சேர்த்து கொடுப்பதே சிறந்தது.

வறுத்த மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட சிப்ஸ்கள்: உருளைக்கிழங்கு சிப்ஸ்கள், சீஸ், பஃப்ஸ் மற்றும் பிற பேக்கேஜ் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகள் ஆகியவை பொதுவாக அதிக உப்பு , ஆரோக்கியமற்ற கொழுப்புகள் , மற்றும் குறைவான ஊட்டச்சத்துக்களுடன் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழமாக வறுக்கப்படுகின்றன.

அதிக உப்பு, குழந்தைகளில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு பங்களிக்கும் என்கிறது American Diabetes Association. கொழுப்புகள் உடல் பருமன் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்வது மற்ற சத்துள்ள உணவுகளை குழந்தைகள் தவிர்க்க காரணமாகி, அவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை சீர்குலைக்கிறது.

அதிக சர்க்கரை கொண்ட காலை உணவு தானியங்கள்: குழந்தைகளைக் கவரும் வகையில் சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான காலை உணவு தானியங்கள் மிகவும் பதப்படுத்தப்பட்டவை மற்றும் சர்க்கரையால் நிரப்பப்பட்டவை. அவற்றின் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரித்து, சிறிது நேரத்திலேயே ஆற்றல் குறைவை ஏற்படுத்துகிறது என்கிறது Centers for Disease Control and Prevention.

இது பள்ளி செல்லும் குழந்தைகளின் கவனக்குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், அவற்றில் நார்ச்சத்து (Fiber) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே உள்ளன. அவற்றிற்குப் பதிலாக, சர்க்கரை குறைவாக உள்ள முழு தானிய ஓட்ஸ் (Whole-Grain Oats) அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத தானியங்களை பழங்களுடன் கொடுப்பது நல்லது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version