தமிழகத்தில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை (நவ.17) தொடங்கியதை ஒட்டி, லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களின் புனித யாத்திரையைத் துவங்கும் விதமாக, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த விரதக் காலம் பொதுவாக ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் நீடிக்கும்.
இந்த நாட்களின் முக்கிய அங்கமாக, பக்தர்கள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதாக நம்பப்படுகிறது. அதில் மிக முக்கியமானதும், சவாலானதும் ஒன்றுதான் – காலில் செருப்பு அணியாமல் வெறுங் காலில் நடப்பது.
ஐயப்ப விரதத்தில் வெறுங் காலில் நடப்பது என்பது ஆழமான ஆன்மிகப் பொருளைக் கொண்டது. செருப்புகளை துறப்பது என்பது, உலகப் பற்று, ஆடம்பரம், மற்றும் சுகபோகங்கள் மீதான பற்றின்மையை வெளிப்படுத்துகிறது. அனைவரும் சமம் என்பதை குறிக்கும் எளிய வாழ்வின் அடையாளம் என நம்பப்படுகிறது.
வெறுங்காலில் நடப்பதால், உடல் நேரடியாக பூமித்தாயுடன் தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது. இது உடலுக்கும் பூமிக்கும் இடையிலான சக்தியை சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம், கால்கள் வெறுங்காலில் நடப்பதற்கு பழகி, சபரிமலை பயணத்தின் கடினமான சவால்களை எதிர்கொள்ள உடல் தயாராகிறது.
சுகாதாரச் சவால்களும் அவற்றைத் தவிர்க்கும் வழிகளும்!
ஆன்மிக ரீதியாகப் பல நல்ல காரணங்கள் இருந்தாலும், இன்றைய நகரமயமாக்கப்பட்ட, சுகாதாரச் சவால்கள் நிறைந்த உலகில், வெறுங் காலில் நடப்பது தவிர்க்க முடியாத சில சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பக்தர்கள் இந்தச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்கிறார் எலும்பியல் மருத்துவர் லோகநாதன்.
- கால் தொற்றுக்கள் குறிப்பாக பூஞ்சை, பாக்டீரியா தொற்று ஏற்படுவதை தவிர்க்க தினசரி பாதத்தை சுத்தம் செய்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் மிதமான சூடுள்ள நீரில் கால்களை நன்றாகக் கழுவி, சுத்தமான துணியால் ஈரம் போக துடைக்க வேண்டும். குறிப்பாக, கால் விரல் இடுக்குகளைத் துடைக்க வேண்டும்.
- காயங்கள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, சிமெண்ட் தரை, கூர்மையான கற்கள் உள்ள பாதைகளைத் தவிர்த்து, முடிந்தவரை மண் மற்றும் சுத்தமான தரையில் நடக்க முயற்சிக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் தடவி மசாஜ் செய்யலாம்.
- உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சலை தடுக்க, நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ கூடாது. கால்களுக்குப் போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். ரத்தம் ஓட்டத்தை சீராக்க அவ்வப்போது கால்களை உயர்த்தி வைத்து படுக்க வேண்டும்.
- பொது இடங்கள், குறிப்பாக பொது கழிப்பறைகள் மற்றும் சேறு நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத போது பயன்பாட்டுக்குப் பின் கால்களைச் சுத்தமாக கழுவ வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள், நரம்பு பாதிப்புகாரணமாகக் காலில் ஏற்படும் சிறு காயங்களையும் உணர முடியாமல் போகலாம். எனவே, இவர்கள் தினமும் கால்களை கவனமாக பராமரிப்பது அவசியம் என்றார்.
-
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலால் ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை தடுக்க, தினசரி 10 நிமிடத்திற்கு வெறுங் காலில் நடக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால், சில முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் வெறுங் காலில் நடக்கும் நன்மைகளை பெறலாம். குறிப்பாக, காலணி அணியாமல் புல், மணல் போன்ற இயற்கை பரப்புகளில் நடப்பது, ‘எர்திங்’ அல்லது ‘கிரௌண்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.
- உள்ளங்கால்களில் அழுத்தம் ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, வீக்கம் குறைவதோடு இருதய ஆரோக்கியமும் மேம்படும் என்கிறது ஆய்வு.
- கால் தசைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் தொடை தசைகள் வலுப்பெற உதவும்.
- பூமியின் எதிர்மறை அயனிகள் உடலின் நேர்மறை அயனிகளை சமநிலைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியான மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
- உடலின் சமநிலை மற்றும் தோரணை மேம்படுகிறது.
