அசைவ பிரியர்களின் முதல் விருப்பமாக இருப்பது சிக்கன் தான். பொதுவாக, சிவப்பு இறைச்சியுடன் ஒப்பிடும்போது, சிக்கன் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரதம் கொண்ட ஒரு ஆரோக்கியமான தேர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் தினசரி உணவில் சிக்கனை சேர்த்து கொள்கின்றனர்.
ஆனால், சமீபத்திய ஆய்வுகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியை மீண்டும் நினைவுபடுத்துகின்றன. தினசரி அல்லது அதிகப்படியான சிக்கன் நுகர்வு, நம் உடலின் செரிமான மண்டலத்தை, குறிப்பாக இரைப்பையை பாதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை தற்போது எழுந்துள்ளது.
ஆய்வுகள் சொல்வது என்ன? சமீபத்தில் ‘Nutrients’ இதழில் வெளியிடப்பட்ட மற்றும் இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, வாரத்திற்கு 300 கிராமுக்கும் அதிகமான கோழி இறைச்சியை உண்பவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய்கள் (Gastrointestinal Cancers) ஏற்படும் அபாயம் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
- வாரத்திற்கு 100 கிராமுக்கும் குறைவாக சிக்கன் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, 300 கிராமுக்கும் மேல் சாப்பிடுபவர்களுக்கு மரண அபாயம் 27% அதிகரிக்கிறது.
- குறிப்பாக ஆண்களுக்கு இந்த அபாயம் இருமடங்காக (சுமார் 2.6 மடங்கு) இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
- இது வெறும் இரைப்பை புற்றுநோய் மட்டுமல்லாமல், கல்லீரல், கணையம் மற்றும் குடல் சார்ந்த 11 வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஏன் இந்த அபாயம் ஏற்படுகிறது? சிக்கன் நேரடியாக புற்றுநோயை உருவாக்குவதில்லை. மாறாக, அதை நாம் கையாளும் முறை மற்றும் உண்ணும் பழக்கங்களே ஆபத்தை உண்டாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
- சமைக்கும் முறை: சிக்கனை மிக அதிக வெப்பநிலையில் வறுக்கும்போதோ (Deep Frying) அல்லது தணலில் வாட்டும்போதோ (Grilling/Barbecuing), அதில் ‘ஹெட்டோரோசைக்ளிக் அமீன்கள்’ (HCAs) மற்றும் ‘பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள்’ (PAHs) போன்ற வேதிப்பொருட்கள் உருவாகின்றன. இவை மனித உடலில் டிஎன்ஏ-வை (DNA) பாதித்து புற்றுநோய்க்கு வழிவகுக்கும் காரணியாக மாறுகின்றன.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி: நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான சோடியம் ஆகியவை வயிற்றின் உட்புறச் சுவரைப் பாதித்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
- சமச்சீரற்ற உணவு: தினமும் சிக்கன் உண்பவர்கள், தங்கள் உணவில் காய்கறிகள், நார்ச்சத்து மற்றும் பிற புரத ஆதாரங்களை (மீன், பருப்பு வகைகள்) தவிர்த்துவிடுகின்றனர். இதனால் வயிற்றின் இயற்கையான பாதுகாப்பு மண்டலம் பலவீனமடைகிறது.
- வளர்ப்பு முறை: கோழி வளர்ப்பில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக்குகள் மற்றும் ஹார்மோன் ஊசிகள் மனித உடலுக்குள் சென்று வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
