ஐஸ்கிரீம் ஒரு நவீன கண்டுபிடிப்பு போலத் தோன்றினாலும், அதன் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. அது ஒரே நேரத்திலோ அல்லது ஒரே நபராலோ கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக, இதை உறைய வைக்கும் யோசனை படிப்படியாக வளர்ந்தது. ஐஸ்கிரீம் முதன்முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கிமு 200 ஆம் ஆண்டு வாக்கில், பண்டைய சீனாவில் மக்கள் பால் மற்றும் அரிசி கலந்த ஒரு உறைந்த கலவையை, பனிக்கட்டியால் குளிரூட்டி உட்கொண்டனர். இதுவே ஐஸ்கிரீமின் ஆரம்ப வடிவம் என்று நம்பப்படுகிறது.
கிமு 400-ஆம் ஆண்டு வாக்கில், பண்டைய இந்தியாவில் “யக்சால் (Yakhchal)” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு அதிநவீன பனிக்கட்டி சேமிப்புக் கட்டமைப்பாகும். இந்த அமைப்பை பயன்படுத்தி, பாரசீகர்கள் ஐஸ்ஸுடன் குங்குமப்பூ, பழங்கள் மற்றும் ஃபலூடா போன்ற நூடுல்ஸ் சேர்த்து குளிர்ந்த இனிப்புகளை பரிமாறியதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஐஸ் பயன்படுத்திய இனிப்புகள் மற்றும் ஐஸ் சார்ந்த உணவுகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமில் உறைந்த இனிப்புப் பண்டங்கள் ஒரு ஆடம்பரப் பொருளாக இருந்தன. மாவீரன் அலெக்சாண்டர் மற்றும் ரோமானியப் பேரரசர் நீரோ போன்ற தலைவர்களுக்காக மலைகளிலிருந்து பனிக்கட்டி கொண்டுவரப்பட்டதாக ஒரு கதை உண்டு. அதில் தேன், பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவை சேர்க்கப்பட்டன.
கி.பி. 611 மற்றும் 907-க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா பெரும் முன்னேற்றங்களை அடைந்தது. டாங் வம்ச ஆட்சி காலத்தில், எருமை, பசு மற்றும் ஆடுகளின் பால் கொதிக்க வைக்கப்பட்டு, சுவையூட்டப்பட்டு, பின்னர் உறையவைக்கப்பட்டது.
13 ஆம் நூற்றாண்டில், மார்கோ போலோ என்ற பயணி, உறைந்த பால் இனிப்பு வகைகளைப் பற்றிய விளக்கங்களை சீனாவிலிருந்து இத்தாலிக்குக் கொண்டு வந்தார். இந்த யோசனை இத்தாலி முழுவதும் பரவி, பின்னர் ஐரோப்பா முழுவதிலும் பரவியது.
1660ஆம் ஆண்டில், பாரிசில் உள்ள கஃபே புரோகோப் (Café Procope) பொதுமக்களுக்கு ஐஸ்க்ரீமை விற்பனை செய்யத் தொடங்கியதன் மூலம், ஐஸ்க்ரீம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கத் தொடங்கியது. அங்கு பால், கிரீம் மற்றும் முட்டை அடிப்படையிலான ஐஸ்க்ரீம் தயாரித்து விற்கப்பட்டது.
இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1851ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஜேக்கப் ஃபஸல் (Jacob Fussell) உலகின் முதல் ஐஸ்க்ரீம் தொழிற்சாலையை தொடங்கினார். இதன் மூலம் ஐஸ்க்ரீம் தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு, பரவலாக மக்களிடம் சென்றது.