அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம், அதிகாரவரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் அது தொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை எனவும், தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இது போன்ற வழக்குகளில் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ஆறு புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தங்கள் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுகிறார்கள் என்பது அல்லவா என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதைப் போல தெரிகிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரை விட உயர்ந்ததா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், அரசியல் சாசனத்தில் உயர்ந்த அதிகாரி, தாழ்ந்த அதிகாரி என்று எதுவும் இல்லை என்றும் அரசியல் சாசனத்தில் அனைத்து அதிகாரிகளும் சமமானவர்கள் என குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் எப்போது முடிவெடுக்கப்படும் என அதிகாரிகளை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
