தமிழ்நாட்டில் பாஜகவுக்கு No Entry என்றும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 வெற்றி உறுதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கபப்ட்ட நாளை ஒன்றாக இணைத்து முப்பெரும் விழாவை திமுக கரூரில் பிரமாண்டமாக நடத்தியது. கோடங்கிபட்டியில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லி நம் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும் திணிப்புக்கும், பாஜகவுக்கு அன்றும், இன்றும் நோ எண்ட்ரி தான்.
2019ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் எதிரிகளை கலங்கடிக்கும் வகையில் தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். உங்களை போன்ற தொண்டர்கள் இருப்பதால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. உங்களுக்கு தலைமை தொண்டனாக நான் இருப்பது வாழ்க்கையில் பெற்ற பெரும்பேறு.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை கைப்பற்றியது பாஜக தான் என உண்மையை பேசியுள்ளார். அந்த கைப்பாவை அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய திமுகதான் காரணம் என நம்மீது பாஜக வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது. திமுக மிரட்டலுக்கு அஞ்சும் கட்சியா?
ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது அது எனக்கு தெரியாதவர் என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். முழுதாய் நனைந்தப் பின் முக்காடு எதற்கு என கேட்பார்கள். அதுபோல், நேற்று டெல்லியில் கார் மாறி மாறி சென்ற எடப்பாடி பழனிசாமியை பார்த்து, காலிலேயே விழுந்தபின் முகத்தை மறைக்கக் கைகுட்டை எதற்கு என்று கேட்கிறார்கள்.
ஒன்றிய அரசுடன் போராடி தலைநிமிர்த்தும் தமிழ்நாட்டை ஒருநாளும் தலை குனியவிடமாட்டோம். தமிழ் மண் தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது. அந்த தமிழ் மண்ணை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. டெல்லி நம் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், திணிப்புக்கும், பாஜகவுக்கும் இங்கு அன்றும் இன்றும் நோ எண்ட்ரி தான்” என பேசியுள்ளார்.