முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதிமுகவில் இருந்த தலைவர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விருதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முத்தரசன், “சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச் சட்ட இயக்க கோரிக்கை” வைத்ததாக தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய திருமாவளவன், ”ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதால் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதலமைச்சரிடம் பேசியதாக” தெரிவித்தார்.