மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அணி திரள் போராட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன.
ஆர்பாட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது முதலாக, காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை சிதைத்து வருகிறார். தற்போது காந்தி பெயரில் உள்ள திட்டத்தை பாஜகவினர் மாற்றியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 150 நாட்கள் வரைதான் வேலை உள்ளது. மற்ற நாட்களில் ஊதியம் இல்லாமல் அவர்கள் சிரமம் அடைவதை கருத்தில்காெண்டு, மன்மோகன் சிங் ஆட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தையும் பாஜக அரசு மாற்றியுள்ளது.
குறிப்பாக, இந்த திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கியது ஏன்? இதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இதையடுத்து பேசிய திராவிட கழக தலைவர் கி வீரமணி, “காந்தியின் பெயரை நீக்குவதை ஏற்க முடியாது. விவசாயிகளுக்கு வேலை உத்தரவாதம் கொடுக்கதான் காந்தியின் பெயரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. திட்டத்தின் பெயரை வேண்டுமானால் அவர்கள் மாற்றலாம். காந்தியை நாம் ஒவ்வொருவரும் நினைத்து பார்ப்பதை அவர்களால் மாற்ற முடியுமா? அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக அரசு செயல்படுகிறது. இது பெயர் மாற்றம் மட்டுமல்ல என்பதை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழ்நாட்டை சீண்டி பார்க்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கல்வி உரிமை, தகவல் உரிமை என எத்தனையோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது மிகச் சிறப்பான திட்டம். இந்த திட்டம் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பது மோடிக்கு பிடிக்கவில்லை.
அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மக்கள் அறிவாளிகள். அதனால்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லை. இந்த திட்டம் இல்லையென்றால், மக்கள் இறந்து போய் இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் அணி திரள் போராட்டம் நடத்த வேண்டும். மக்களுக்காக இந்த போரட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
