முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரை தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அக்கட்சி தலைமைக் கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் அடுத்தடுத்து நேற்று சந்தித்துப் பேசினர்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் தலைமைக் கழக நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் நேற்று மாலை வந்தனர்.
அப்போது இபிஎஸ்சிடம், விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க நேரில் அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே. சுதீஷ், “இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளோம். அரசியல் குறித்து பேசவில்லை. முதலமைச்சரை சந்தித்தும் அழைப்பு கொடுக்க இருக்கிறோம். கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த எல்.கே. சுதிஷ் உள்ளிட்ட தேமுதிக தலைவர்கள், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
