நடிகர் விஜய்க்கு ரூ.500கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாக அதிமுக எம்.எல்.ஏ கருப்பணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில், ஊத்துக்குளி அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே பேசிய பவானி அதிமுக எம்எல்ஏ கருப்பணன்,
”எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி அமைந்துள்ளது எனவும், எனவே நாம்தான் 200 தொகுதிகளில் ஜெயிக்க போகிறோம். கடந்த தேர்தலில் இருகட்சியும் தனித்தனியே பிரிந்து நின்றதால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். மேலும் கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வரவுள்ளதாகவும், மேலும் இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு ரூ.500 கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர் வாங்கமாட்டார். அப்படி வாங்கினால் அவர் அரசியல் அத்துடன் முடிந்துவிடும்” என்றார்.
”விலைவாசி ஏறியுள்ளது. இளைஞர்கள் விரைவாக தேர்தல் பணிக்கு வருவர். கட்சியில் இப்போதுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த தெரியாது. எனவே இளைஞர்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும். அவர்களுக்கும் கட்சியில் எந்தவிதமான பதவிகளும் கிடைக்கலாம். ஏழை, எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென நினைப்பவர்களே அரசியலுக்கு வர வேண்டும்” என்றார்.