குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.5,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான எடப்பாடியில், ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.2 கோடியே 9 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக விருப்பப்பட்டால், பாஜக கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். அது அவரது கருத்து. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள், தேர்தல் நேரத்தில் எங்களோடு கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழர்களின் பண்டிகைகளில் ‘தைப்பொங்கல்’ முக்கியமானது. அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பரிசுத் தொகை கொடுத்தார். அதிமுக அரசு இருந்தபோது, ரூ.2,500 வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், தற்போது வரை ‘பொங்கல் தொகுப்பு’ எவ்வாறு வழங்கப்படும் என்று அறிவிப்பு வரவில்லை. இதுவே திமுகவிற்கு இறுதி ஆண்டு. இனி ஆட்சிக்கு வர மாட்டார்கள்.
இந்த ஆண்டாவது மக்கள் மனம் குளிரும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்போடு, ரூ.5,000 வழங்க வேண்டும். ஏனென்றால், அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் ரூ.5,000 கொடுக்கக் கூடாது? என்று திமுகவினர் கேட்டார்கள். அதே கேள்வியைதான் தற்போது நாங்கள் எழுப்புகிறோம்.
திமுக ஆட்சியில், கடன் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த ஆட்சி முடியும் போது, சுமார் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாக இதுதான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “21 ஆண்டுகாலமாக எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது. அதனால், தேர்தல் நேரத்தில் இறந்தவர்கள் உயிர் பெற்று, திமுகவுக்கு ஓட்டுப் போட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால்தான், இப்போது எஸ்ஐஆர்-ஐ பார்த்து திமுக பதறுகிறது. இறந்தவர்களை வைத்தும், போலி வாக்காளர்களை வைத்தும் வெற்றி பெற்று வந்தோம். அதற்கு இடையூறு வந்து விட்டதே என எண்ணி அஞ்சுகின்றனர்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
