பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று, அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மருத்துவர் ராமதாசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதற்கான தரவுகள் உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்த முரண்பாடுகளை தீர்க்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்” என்று ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான ‘மாம்பழம்’ ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ராமதாஸ் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என அறிவித்துள்ளது. இந்த கடிதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”அன்புமணி 2023 ம் ஆண்டு நடந்த கட்சியின் பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2026 வரை தலைவராக நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி திருவேற்காட்டில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தான் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து மே மாதம் 29 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அப்படி என்றால் அவரது பதவி காலம் 3 ஆண்டுகளில் முடிந்துவிட்டது.
ஆனால் 2023ம் ஆண்டுதான் பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும், அதில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவரது பணி வருகின்ற 2026 வரை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பில் போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களோடு சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
