2026-ம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 10 மாதங்களே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. பிறகு பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்தது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பின் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. முன்னதாக தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், விஜய் இவர்களோடு சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனக் கூறியுள்ளார்.