அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்ந்த தேர்தல் வழக்கில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட விலக்கை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தேர்தல் பத்திரத்தில் சில தரவுகளை சொல்ல மறந்ததாகவும், சில தரவுகளை தவறாக சொன்னதாகவும் தேர்தல் ஆணையத்தால் தொடரப்பட்ட வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், அந்த வழக்கு தவறான வழக்கு என்றும், அந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தும், கே சி வீரமணி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தது, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூலை 9 ஆம் தேதிக்கு இறுதி விசாரணைக்கு வழக்கை ஒத்திவைத்தும், மேலும் தடையை நீட்டித்தும், கே சி வீரமணி நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கில் கே சி வீரமணியின் சார்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர் எம் பாபு முருகவேல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் நேரில் ஆஜரானார்.
