என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு நயினார் நாகேந்திரனே காரணம் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், இதற்கு நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகிய டிடிவி தினகரன், தான் கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
“ எனக்கும் டிடிவி தினகரனுக்கும் தனிப்பட்ட விதத்தில் பிரசினை இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேற நான் தான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பலமுறை பேசியபோதும் அவர் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை. டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது.
தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. நான் மாநில தலைவர். தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்பதெல்லாம் கிடையாது. கூட்டணிதான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக வெற்றிபெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.
செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டது அவர்களில் கட்சி விவகாரம். இதில் நான் கருத்து சொல்ல முடியாது. தான் கோவிலுக்கு செல்வதாக செங்கோட்டையனே கூறிவிட்டார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் செல்லவில்லை.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இருந்தால்தான் எதிரியை வீழ்த்த முடியும்” எனக் கூறியுள்ளார்.