திமுகவில் ஆயிரம் சாமிகள் இருந்தாலும் பெரியசாமி எனக்கு முக்கியமான சாமி, சிங்கத்தை வீழ்த்திய யானை பெரியசாமி என்றெல்லாம் கருணாநிதியால் பாராட்டு பெற்ற ஐ.பெரியசாமி இன்று திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தின் திமுக முகமாக வலம்வந்து கொண்டிருக்கும் ஐ.பெரியசாமி, அமைச்சராகவும் திமுக துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். தற்போது ஆத்தூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினாலும் தனது தனி செல்வாக்கில் வெற்றி பெற கூடிய நபர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களின் பத்திரிக்கையாகட்டும், போஸ்டர்களாகட்டும் ஐ.பெரியசாமி பெயர் இல்லாமல் இருக்காது. அந்தளவிற்கு தனது ஆதரவாளர்களை பட்டி தொட்டியெல்லாம்வளர்த்து வைத்துள்ளார். அதற்கு சாட்சியாக 2021 தேர்தலில் தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் அதாவது 1,45000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
சட்டமன்றத்திற்கு தந்தை மகன் சேர்ந்து சென்ற பட்டியலில் கருனாநிதி-ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம்- ராஜாவுக்கு அடுத்தபடி ஐ.பெரியசாமியும் அவரதும் மகனுமான செந்தில்குமாரும் ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கு சென்றவர் மேலும் மாவட்ட செயலாளராகவும் அவரது மகன் பொறுப்பு வகிக்கிறார் அந்த அளவிற்கு திமுகவில் செல்வாக்காக இருந்த ஐ.பெரியசாமிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியில் பெரிதாக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றே கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை 2021 ஆட்சியமைத்த போது சீனியரான பெரியசாமிக்கு சாதாரண கூட்டுறவுத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. அப்போதிலிருந்து அப்செட்டில் இருந்த அவர், நீண்ட நாட்களாக அமைச்சர்கள் தங்கும் கிரீன்வேஸில் தங்காமல் தனக்கு சொந்தமான வீட்டிலே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பின் 2022 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வருடம் 2026 தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய நிலையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை கொண்டு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியது. மேலும் கடந்த வாரம் தேர்தலுக்காக 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் அந்த பட்டியலிலும் ஐ.பெரியசாமி பெயர் இடம்பெறவில்லை. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் கோபத்தில் இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட உடன்பிறப்புகளின் பேச்சாக உள்ளது. மேலும் வருங்காலங்களில் அவருக்கு சில பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படலாம் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனாலும் நேற்று முன் தினம் தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சி நிர்வாகிகளுக்குள் உள்ள போட்டி, பொறாமை, வருத்தங்கள் ஆகியவற்றை மறந்து விட்டு வெற்றி ஒன்று தான் நமது இலக்கு என்பதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று பேசியதில் ஆயிரம் உள் அர்த்தம் உள்ளதாக அங்கு கலந்து கொண்ட தொண்டர்களின் சிலரின் பேச்சாக பார்க்கப்படுகிறது.