32 ஆண்டுகளாக வைகோவுடன் அரசியல் செய்த தன்னை, 3 முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றிய என்னை, துரோகி என்று வைகோ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மல்லை சத்யா வேதனையுடன் கூறியுள்ளார்.
மதிமுகவில் வைகோவுக்கு அடுத்தபடியாக நாடறிந்த முகமாக இருந்தவர் மல்லை சத்யா. ஆனால் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்ததில் இருந்து மல்லை சத்யா ஓரம்கட்டப்படுவதாக பேசப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை வைகோவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து கட்சியை விட்டு விலகுவதாக மல்லை சத்யா கூறினார். பின்னர் இருதரப்பையும் வைகோ சமாதானம் செய்து வைத்தார்.
ஆனால் இப்போது வைகோவே, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று பேசியிருந்தார். இதற்கு மல்லை சத்யா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், துரை வைகோ அவர்களுக்கு எனக்கும் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. நேரடியாக அவருடன் பேசியதும் இல்லை. நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ அதற்கு எதிர் திசையில் தான் வருவார், செல்வார். எந்த தருணத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது என எனக்கு தெரியவில்லை
32 ஆண்டுகள் வைகோ வுடன் அரசியல் பயணம் செய்த என்னை துரோகி என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. இன்று நடைபெறும் கூட்டத்தில் வைகோ வுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் என்மீது கூறும் குற்றச்சாட்டு ஏற்க முடியவில்லை. 3 முறை வைகோ அவர்களின் உயிரை காப்பாற்றியவன் நான். ஆனால் என்னை மாதையா வுடன் தொடர்பு படுத்தி பேசுவது ஏற்க முடியவில்லை. மிகுந்த மன வேதனையாக உள்ளது. அதற்கு பதிலாக விஷம் வாங்கி கொடுத்தால் அவர் இல்லம் முன்பாகவே குடித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
