தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், பொதுக்குழு எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று மதிமுக நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடைபெற்றது. இதில் வைகோ சிறப்புரை ஆற்றினார். இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 தேர்தலில் திமுகவுடன் இணக்கமாக நிற்பது என்ற முக்கிய தீர்மானம் நிறைவேறியது. அரசியலமைப்பு சாசனத்தில் மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை சிறுமைப்படுத்திய காணொலிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.