திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா, பாஜக மற்றும் தவெக இடையேயான அரசியல் இணைப்புக்கான பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டு வருவதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா, “பாஜக – தவெக இணைப்பு வேலையை வைகோ செவ்வனே செய்து வருகிறார். இன்று திமுகவுக்கு என்ன நடக்கிறதோ, அதே நிலை நாளை தவெகவுக்கும் வரும். தான் கூறுவதை தவெக ஏற்கவில்லை என்றால், வைகோ அவர்களையே விமர்சிப்பார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “32 ஆண்டுகள் வைகோவின் தலைமையில் பணியாற்றினேன். ஆனால் கடைசி நான்கு ஆண்டுகளில் அவரது மகனுக்காக என்னை முற்றிலும் புறக்கணித்தார். என்னை கட்சியில் இருந்து நீக்க பல்வேறு நாடகங்கள் நடத்தப்பட்டன. துரை வைகோ, என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்சியை விட்டு விலகுவேன் என அறிக்கை வெளியிட்டார். என்னை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் பின்னணியில் வைகோவும், அவரது மகனும் இருந்தனர். ஆனால் அதனால் எனக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்று கூறினார்.

மேலும், “நாங்கள் வெளியேறிய பிறகு மதிமுக படிப்படியாக அரசியல் அரங்கில் பலவீனமடைந்து வருகிறது. ராஜாஜி காலத்தில் சுதந்திரா கட்சி மறைந்தது. ம.பொ.சி தலைமையிலான தமிழரசு கழகமும் காலப்போக்கில் காணாமல் போனது. சிவாஜி கணேசனின் கட்சியும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதுபோலவே தற்போது மதிமுகவும் அரசியல் வரலாற்றில் மறையும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது” என விமர்சித்தார்.

“மகன் திமுகவை கவனிப்பார், பின்னர் கனடாவின் டொரோண்டோவில் செட்டிலாகிவிடுவார். அதற்குள் பாஜக – தவெக இணைப்பு பணியை வைகோ மேற்கொண்டு வருகிறார்” என மல்லை சத்யா மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version