ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதி ஏற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்குக் கீழ் வைக்கப்பட்ட அண்ணா அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், மாதவரம் சுதர்சனம், வேற்றியழகன் உள்ளிட்டோர், மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதில் “நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்” என உறுதிமொழி ஏற்றனர்.