பிரதமரின் தமிழகப் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது.
ஒட்டுமொத்த தென்னாட்டையும் தனது ஒற்றை வெண்கொற்றக் குடையின் கீழ் ஆண்ட சக்கரவர்த்தி இராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நமக்கு வழங்குவதற்காகவும் 2 நாள் அரசு முறைப்பயணமாக, நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்தடைந்தார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.
நாட்டு மக்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொற்கால ஆட்சி வழங்கி, நம் எல்லைகளை பலப்படுத்தி, கடல்கடந்து நம் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் “கலியுகக் கடாரம் கொண்டான்” நமது மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு, தமிழக பாஜக சார்பாகவும், நமது கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக-வின் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்ளிட்ட அஇஅதிமுக-வின் முக்கியத் தலைவர்கள் சார்பாகவும் திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.452 கோடி நிதி செலவில் உருவான தூத்துக்குடி நவீன விமான நிலையம், ரூ.2,357 கோடி நிதி ஒதுக்கீட்டில் தஞ்சை சோழபுரம்-சேத்தியாத்தோப்பு வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ. 4900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளைத் துவங்கி வைத்தார் நமது மாண்புமிகு பிரதமர். தமிழகத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை நல்கிய நமது மத்திய அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்பு மக்களிடம் சிறப்புரையாற்றிய நமது மாண்புமிகு பிரதமர், தூத்துக்குடி மண்ணில் பிறந்து கடல்வழி வணிகத்தின் சக்தியை உணர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆழ்கடலில் கப்பலை செலுத்திய திரு. வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் சாதனைகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், சுதந்திரமான, வல்லரசு நாட்டை உருவாக்கிடப் பெருங்கனவு கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துக்கோன், சுப்பிரமணிய பாரதி, போன்ற மகான்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி, அவர்களின் கனவுகள் நனவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை எனவும் உறுதியளித்தார். அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இன்னும் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. தந்தையின் பேரரசுக் கனவை தனது வாழ்நாள் சபதமாக ஏற்றுக்கொண்டு அதை செயல்படுத்திக் காட்டிய அந்த இராஜேந்திர சோழனே நம் முன் நின்று மீண்டும் சபதம் ஏற்றது போலான பிரமிப்பு ஏற்பட்டது.
அடுத்ததாக, பண்டைய பாரதத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்களித்த நமது பாண்டிய நாட்டு முத்துக்களின் பெருமை குறித்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மண்ணில் துல்லியமாக விவரித்த நமது பிரதமரின் வரலாற்று ஞானம் கண்டு அதிசயித்துப் போனேன். அதிலும் பாரம்பரியமிக்க நமது பாண்டிய நாட்டு முத்துக்களை உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் திரு. பில்கேட்ஸ் அவர்களுக்கு பரிசளித்த நமது பிரதமரின் தமிழ் பற்றினை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஒவ்வொரு மேடையிலும் நமது தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை உரக்கக் கூறி உலகை வியக்க வைக்கும் நமது பிரதமர், தொடர்ந்து நமது தமிழ் பாரம்பரியப் பொருட்களை உலகரங்கில் அடையாளப்படுத்தி வருகிறார். தமிழ் மொழி மீதும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மீதும், தமிழ் மன்னர்கள் மீதும் அளவற்ற நேசம் கொண்ட ஒரு பிரதமர் இந்திய வரலாற்றிலேயே திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒருவர் தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை திருச்சியிலும் பொன்னேரியிலும் நடைபெற்ற ரோடு ஷோவில் ஆரவாரமிக்க மக்கள் வெள்ளத்தில் நீந்தி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை அடைந்த திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றவர் திரு. நரேந்திர மோடி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு ராஜேந்திர சோழனின் கங்கை வெற்றியை நினைவு கூறும் வகையில் வாரணாசியில் இருந்து தான் கையோடு எடுத்து வந்திருந்த கங்கைப் புனித நீரைக் கொண்டு பிரகதீஸ்வரருக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்தில் கலந்து கொண்ட நமது பிரதமர், சாமி தரிசனத்திற்கு பிறகு கோவில் சிற்பங்களையும் புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தார்.
பின்பு சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் மற்றும் மாடாதிபதிகள் ஆகியோர் இருந்த இராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழா மேடைக்கு வந்த நமது பிரதமரின் முன்னிலையில், 40 ஓதுவார்கள் பாடிய தேவாரப்பாடலும், இசைஞானி இளையராஜா அவர்களின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டன. கங்கை கொண்ட சோழபுரத்தில் நேற்று ஒரே மேடையில் இத்தனை சைவப் பெரியவர்கள், மக்களின் பேராதரவோடு கூடியிருந்ததைப் பார்க்கையில் உண்மையில் அனைவருக்கும் புல்லரித்துப் போனது.
என்னதான் நமது மாநிலத்தை நாத்திகக் கரும்புகை சூழ்ந்து நம் இயல்பை மறைக்க முயன்றாலும், “தமிழகம் என்றுமே ஆன்மீகம் தழைத்தோங்கும் புண்ணிய பூமி” என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்ட இந்நிகழ்வின் வெற்றி முழுமையும் நமது பாரதப் பிரதமரையே சாரும்.
விழாவின் முத்தாய்ப்பாக, சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியை வழங்கிய இராஜேந்திர சோழனின் திருவுருவம் பொறித்த நினைவு நாணயத்தையம், திருவாசகம் உரைநடை நூலையும் வெளியிட்டு மக்களிடம் சோழரின் வரலாற்று பெருமை குறித்து உரையாற்றிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், “அன்பே சிவம்” என்ற சைவ சித்தர் திருமூலரின் கோட்பாட்டினை மேற்கோள் காட்டி நமது நாட்டில் நிகழும் வன்முறைகளுக்கு சைவ சித்தாந்தம் தகுந்த தீர்வு கொடுக்கும் என்பதை விளக்கினார். மேலும், தமிழகத்தில் இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் மத்திய அரசின் சார்பாக பிரம்மாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கூறி தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.
பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியது முதல் சோழ மன்னர்களுக்கு சிலை அமைப்பது வரை தமிழரின் அடையாளங்ளை மீட்பதில் முனைப்புடன் செயலாற்றி வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமரை தமிழகம் மனதார வாழ்த்தி வணங்குகிறது.
அரசுமுறைப் பயணமாக மாலத்தீவு சென்று விட்டு அங்கிருந்து அப்படியே நமது தமிழகத்திற்கு வருகை தந்து நேற்று முன்தினம் இரவு நெடுநேரம் தூத்துக்குடி விழாவினையும் நேற்று காலை கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த முப்பெரு விழாவினையும் ஒருசேர சிறப்பித்து விட்டு, நேற்று மதியம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள நமது மாண்புமிகு பிரதமர், ஓயாத கடல் அலை போன்றவர்.
ஒரு மனிதன் இத்தனை சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என இளைஞர் பட்டாளம் வியந்து பார்க்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரோடு இரண்டு நாட்களைக் கழித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். அதுமட்டுமன்றி நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தூத்துக்குடி முதல் திருச்சி வரை அவரது தனி விமானத்தில் என்னை அழைத்துச் சென்றதும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. இன்னும் எத்தனை காலங்கள் கழித்து நினைத்துப் பார்த்தாலும் மெய்சிலிர்க்கும் அனுபவம்!