“பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை..” என கூறும் வுஜய்க்கு தொண்டர்கள் மைண்ட் வாய்ஸாக சில கேள்விகளல்ள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒருவழியாக தனது முதல் வீக் என்ட் தேர்தல் பிரசார பயணத்தை கடந்த வாரம் தொடங்கிவிட்டார். விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளில் விஜய்யின் பேச்சும், தவெக தொண்டர்களாக அறியப்படும் அவரது ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையும் ஒன்றை மட்டும் உறுதியாக வெளிப்படுத்தியது. அது ஒட்டுமொத்த தவெகவும் இன்னும் தீவிர சினிமாத்தனத்துடன் இயங்குவதையும், அவர்கள் சிறிதேனும் அடிப்படை அரசியல் கட்டமைப்புக்குள் வரவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக விஜய்யால் தனது ரசிகர்களை இப்போதுவரை அரசியல்படுத்த முடியவில்லை என்பது பொதுமக்களின் விமர்சனமாக உள்ளது.

இந்த நிலையில்தான் தவெக தலைவர் விஜய் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் இருந்து ஆரவாரமாக தொடங்கியுள்ளார். மாநாட்டு நிகழ்வுகளில் அவரது ரசிகர்களிடம் காணப்பட்ட கும்பல் மனநிலை இந்த பிரசார களத்தில் மாறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆங்கில ஊடகங்கத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளரை விஜய் ரசிகர்கள் நடத்திய விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் ஒரு செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை, தங்களது தொண்டர்களை இன்னும் ஆட்டு மந்தையாகவே வழிநடத்திக் கொண்டிருப்பதைதான். இந்தப் புள்ளியில் இருந்து விஜய்யின் தேர்தல் பிரசார உரைகளை அணுக வேண்டும்.

அதாவது, “உங்களது அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும், எவ்வளவு பெரிய வசதியையும் தூக்கி ஏறிந்துவிட்டு வரலாம். என்னங்க பெரிய பணம்… வேணும்ங்குற அளவு பார்த்தாச்சு… அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல தவெக தலைவர் விஜய் பேசியிருந்தார். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த போதும், அவருக்கு ஆதரவு கொடுத்த பலரும் இதேபோன்றே கருத்துத் தெரிவித்திருந்தனர். விஜய்க்கு சினிமாவில் இன்னும் மார்க்கெட் இருக்கிறது, அவர் நினைத்தால் சினிமாவிலேயே கோடிக்கோடியாக சம்பாதிக்கலாம். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வர பெரிய துணிச்சல் வேண்டும். மக்களுக்காக விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கலாம் என ஆளாளுக்கு அவரை கொம்பு சீவி விட்டனர். அதை அப்படியே தனது தேர்தல் பிரசாரத்தில் கன்டென்ட்டாக மாற்றி ரசிகர்களிடம் ஸ்கோர் செய்துவிட்டார் விஜய்.

இதுநாள் வரையிலும் ரசிகர்களின் டிக்கெட் வசூலில் கோடிகளை குவித்த விஜய்க்கு, இனிமேல் இந்த வசூல் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்ற நிலையில் தான் ஞானோதயம் உதித்திருக்கிறது. ஒருவேளை இதனை விஜய் மறுப்பாரேயானால், தனது கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ டிக்கெட்டை ரசிகர்களுக்கு இலவசமாக வழங்குவாரா.? தனது படங்களுக்கு முதல் நாள் டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கில் விற்பனையான போதெல்லாம், அதைப் பற்றி கவலைப்படாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தனக்கு நம்பர் ஒன் இடம் கிடைத்துவிட்டதா? என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் தானே தளபதி விஜய். ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போகும் விஜய், அவர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க பவுன்சர்கள் எதற்கு.? அதுவும் ரசிகர்களிடம் தன்னை பாதுகாக்கும் பவுன்சர்களுக்கு மட்டுமே லட்சங்களில் செலவு செய்வது ஏன்.?

வீட்டில் இருந்து சொகுசு காரில் ஏர்போர்ட் செல்லும் விஜய், அங்கிருந்து தனி விமானத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார். விமான பயணச் செலவு மட்டுமே சுமார் பதினைந்து லட்சத்திற்கும் மேல் ஆகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமா விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பேருந்து முழுக்க முழுக்க அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரும் சொகுசு பங்களா போல விஜய்க்காக உருவாக்கப்பட்டுள்ள அந்த மகிழுந்தின் விலை சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஆக இப்படி கோடிகளை செலவழித்து அரசியலுக்கு வரும் விஜய், எப்படி மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒருவேளை விஜய்யின் இந்த எண்ணங்கள் அனைத்தும் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், அவரது பின்னால் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் பொருளாதாரப் பின்னணியையும் அலசி பார்க்க வேண்டும்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற தவெகவின் உயர்மட்ட நிர்வாகிகள் விஜய்யை போல பொருளாதாரத்தில் நிறைவுப் பெற்றவர்களாக இருக்கலாம். அவர்களும் கூட தலைவர் விஜய்யைப் போல மக்களுக்காக தங்களது செல்வங்களை வாரி இறைப்பார்கள் என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு அடுத்தடுத்த வரிசையில் இருக்கும் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்களின் நிலை என்ன.? அவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?, எத்ந பிரதிபலனும் எதிர்பாராமல் பொதுமக்களுக்கு எப்படி தொண்டு செய்வார்கள்.? அவர்களின் பொருளாதார பின்னணியும் குடும்பச் சூழலும் அப்பழுக்கற்ற அரசியல் களத்திற்கு வழி வகுக்குமா.? தன்னை நம்பி தேர்தல் களத்தில் பணியாற்றும் தவெக தொண்டர்களுக்கு, வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆகிவிட்டால் விஜய் திரும்ப என்ன கைமாறு செய்துவிடுவார்.? பணம் என்ற வகையில் விஜய் தன்னை மட்டுமே முன்னிறுத்தி அதன் தேவைகளையும் சிக்கல்களையும் அணுகுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சினிமாவில் பேசும் பஞ்ச் வசனங்களுக்கும் அரசியல் களத்தில் அளிக்கும் வாக்குறுதிகளுக்குமான வித்தியாசம் கடல் அளவு என்பது விஜய்க்கே இன்னும் புரியவில்லை எனத் தெரிகிறது.

அதேபோல் தவெக தலைவர் விஜய், “அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என பேசியது எவ்வளவு முதிர்ச்சியற்றது என்பதை இன்னொரு வகையில் பார்க்க வேண்டும். அதாவது தங்களுக்கு கிடைத்த பணத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கே வழங்கிய தலைவர்கள் யார் என்பது விஜய்க்கு தெரியுமா என்பது இங்கு மிக முக்கியமான கேள்வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ், ஜோதி பாசு, நிரூபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார், மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சாரியா, வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், பி.சுந்தரைய்யா, ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பது விஜய் கட்டாயம் அறிந்திருக்கமாட்டார்.

முக்கியமாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணுவிற்கு அவரது 80வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் ஆர்.நல்லகண்ணு. அதோடு கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய எனக் கேட்டவர் அவர். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். மேலும், 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. விருது தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட நல்லக்கண்ணு, அத்துடன் தன் பணம் 5,000 ரூபாய் சேர்த்து, 10.05 லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட போதும். அந்த தொகை முழுவதையும் கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அப்படியே வழங்கினார் சங்கரய்யா.

இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்களின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! இதையெல்லாம் விஜய் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், தனது தொண்டர்களையும் அவர் இப்படியான உயரிய நோக்கத்துடன் அரசியல்படுத்த வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இனிமேலாவது இதனை செய்வாரா? அதற்கு முன்பாக தனது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றவும் அவர் முயற்சிகள் மேற்கொள்வாரா.?

Share.
Leave A Reply

Exit mobile version