2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பான மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெறவுள்ள விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தற்போது செங்கோட்டையன் தீவிரமாக செய்து வருகிறார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் இன்று இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ”அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்குவது குறித்த தேதியை தலைவர் விஜய் அறிவிப்பார்” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது. பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
அதிமுக – தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, ”அதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
தவெகவிற்கு எந்த கட்சி போட்டி என்ற கேள்விக்கு, ”அப்படி யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. தவெகவிற்கு மக்கள் சக்தி இருக்கிறது. எனவே தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார். மக்கள் சக்தியாக எதிர்கால தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை விஜய் உருவாக்குவார். ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் நடக்கவிருக்கிறது” என்றார்.
