செங்கோட்டையன் பயணித்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று முற்பகல் 12.30 மணிக்கு இண்டிகோ விமானம் கோயம்புத்தூர் புறப்பட்டது. இந்த இண்டிகோ விமானத்தில் நேற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு கோயம்புத்தூரில் தரையிறங்க வேண்டும்.
ஆனால் கோயம்புத்தூர் வர வேண்டிய இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விமானத்தில் கோயம்புத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வானிலை சரியானவுடன் பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு மாலை 4.15 விமானம் வந்தடைந்தது.
திமுக நிர்வாகிகள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் விமானத்தில் சிக்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக திமுகவினர் தெரிவித்தனர்.
இதனிடையே கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செங்கோட்டையனை வரவேற்பதற்கு உற்சாகமாக வந்த தவெக தொண்டர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், 9 முறை எம்.எல்.ஏ பதவி வகித்த செங்கோட்டையன், கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார்.
இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை செங்கோட்டையன் ராஜிநாமா செய்தார். இதன் பின் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளான நிலையில், அவர் பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பி விடப்பட்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
