சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்றிலிருந்து 17ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் கூடுதல் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்தும், கேள்விகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய முதல் நாள் கூட்டத்தில் கரூர் துயரத்தில் இறந்த 41 பேருக்கும், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இன்றுடன் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டனர்.
பேரவை தொடங்குவதற்கு முன்னதாக சட்டமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அதிமுக அறையில் எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவையில் அடுத்த மூன்று நாட்களிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இபிஎஸ் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கரூர் துயரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.