கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து கும்மாளம் போடும் இயக்கமல்ல திமுக என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசியலில் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளை தொடர்ந்து திருச்சியில் முதல் முறையாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவை அரசியல் எதிரியாக விமர்சித்து வரும் விஜய்க்கு எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன.
இன்று திருச்சியில் நடைபெறும் பிரச்சாரத்தில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கரூரில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, ”உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். செப்டம்பர் 15 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில், “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என உறுதி ஏற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யைன் தவெக கட்சி கொள்கை இல்லா கட்சி, கூட்டத்தை கூட்டி கும்மாளமிடும் கட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.