அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், திமுகவை வீழ்த்த உறுதியேற்பது, வன்னியர் இடஒதுக்கீடு தரவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் உட்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேப்போல், இந்தக் கூட்டத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால் அது தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி தான் என்பதே அனைத்து தரப்பினரின் பொதுக்கருத்தாக உள்ளது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசால் அனைத்து வகைகளிலும் மிக கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இன்றைய தமிழக அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் பெரும் கோபம் கொந்தளிக்கின்றனர். இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு அகற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். அதற்காக திண்ணை பரப்புரை, சமூக ஊடக பரப்புரை, மக்கள் சந்திப்பு இயக்கங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் கடுமையாக பாடுபடுவதற்கு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் உறுதியேற்று கொள்கிறது என தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, 2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,
அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கூறியபோது, மே 28-ல் அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது. அதனால், அவருடைய தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என கூறியுள்ளார்.