திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெற்ற வெற்றி என்பது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்துள்ள கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி (LDF) பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கூட்டணி (UDF) பெரும்பான்மையை இடங்களை பிடித்துள்ளது. இந்தநிலையில், பாஜக தலைமையிலான (NDA) கூட்டணி மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கேரள அரசியலில் இது ஒரு திருப்புமுனையாகும் என குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். கேரளாவின் வளர்ச்சியை முழுமையாக அடைவது பாஜவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாஜக பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
யுடிஎப் மற்றும் எல்டிஎப் கட்சிகளால் கேரள மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும், நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு கேரளாவை உருவாக்கக்கூடிய ஒரே வழி என்டிஏ தான் என்று அவர்கள் கருதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
