எந்த அரசியல் கட்சியும் இனி ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சென்னை அசோக் நகர், அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதனைதொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மதவாத சக்திகளின் முயற்சிகளிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் விசிக சார்பில் அனைத்து மாவட்டங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்படும் சூழலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கையான கூட்டாட்சி நிர்வாக முறை மற்றும் தமிழர் இறையாண்மையை அங்கீகரிப்பதை விசிக வரவேற்கிறது. இந்தியா -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் தலையீடு செய்து, தமிழர்களுக்கான இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு இந்த தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை (SIR) என்பது குடியுரிமையை குறிவைத்து நகர்த்தப்படும் ஒன்று என விசிக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு அல்ல. குடியுரிமை குறித்த சீராய்வு தான் என்பதை அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் முயற்சி. இதனை முற்றாக கைவிட வேண்டும். SIR நடவடிக்கைக்கு எதிராக விசிக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது,” என்றார்.
மேலும், “அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்கிறாரா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.
