தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. முதன் முதலாக களம் காணவுள்ள விஜய்யின் தவெக கட்சியும் பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு மிகவும் உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போவதாக அவர் கூறிய அடுத்த நொடி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆர்பரிக்கத் தொடங்கினர்.
அடுத்த நொடி, ”அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தான் மட்டும் தான் போட்டியிடுவதாக அவர் அறிவித்தாரோ என்ற எண்ணத்தில், தொண்டர்கள் திகைத்து, அமைதி காத்தனர். அதாவது 234 தொகுதிகளிலும் யார் நின்றாலும், அது விஜய் தான் என அனைவரும் கருதி வேலை பார்க்க வேண்டும் என அவர் கூறியதை சிறிது நேரம் கழித்தே தொண்டர்கள் புரிந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன்” என்றார்.